ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ராம் வசந்த்

 இப்படிக்கு உங்கள் சூத்திரன்


என்னைஆதிதிராவிடர் என்றுதான்
உங்கள் சுவரொட்டிகள்
கௌரவப்படுத்துகின்றன
இப்போது இந்து என்ற
மகுடத்தையும் சூட்டுகிறீர்கள்
சரி....
நீங்கள் பின்னர் கொடுக்கும்
ராஜேந்திரனின் வாளோ
கோட்சேவின் துப்பாக்கியோ
ஏதோ ஒன்றை எடுத்து
உங்கள் எதிரியை
நான் முடித்துவிடுவேன்
முடித்தவுடன்
என்னை உங்கள் தலைவனாக
ஏற்றுக்கொள்வீர்களா?
அல்லாது...
உங்கள் எதிரி
என்னை முடித்துவிட்டால்
உங்கள் சுடுகாட்டில்
என்னைப் புதைப்பீர்களா?

                        --ராம்வசந்த்

 

நாங்க அப்பவே அப்படித்தான்!

    1984. எம்ஜியாரின் ஆட்சிக்காலம். நான்கு சட்டமன்ற இடத்துக்கான இடைத் தேர்தல். திமுக தலைவர் கருணாநிதியின் விலகலால் அண்ணாநகர், திமுக
உறுப்பினர் மாயவரம் கிட்டப்பா மறைவின் பொருட்டு, மாயவரம் இன்றைய மயிலாடுதுறை,   மற்றொரு திமுக உறுப்பினர் N.நடராஜன் மறைவின் காரணமாக தஞ்சாவூர், மற்றொரு உறுப்பினரின் விலகல் காரணமாய் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்டது.
   

    தேர்தல் முடிவு இரு கட்சிகளுக்கும் இணையாக அமைந்தது. அண்ணாநகர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளைத் திமுகவும், தஞ்சை மற்றும் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளை அதிமுகவும் என்ற வகையில் தாங்கள் வென்ற தொகுதிகளைத் தக்க வைத்துக்கொண்டன.


   இதில் சென்னைவாசியான, திமுக வெறிகொண்ட* இளைஞனான நான் உள்வாங்கிய அண்ணாநகர் தொகுதியின் சில சம்பவங்களைப் பதிவிடவே இப்போதைய எண்ணம்.

   அண்ணாநகர் தொகுதியானது மேற்குப் பக்கம், உள்ள 11வது மெயின் ரோடு எனும் அப்போதைய பேருந்து நிறுத்துமிடத்தோடு முடிந்துவிடும். அதற்கடுத்து திருமங்கலம் பகுதி தொடங்கிவிடும். நானும் எனது நண்பனும் அப்போது அந்தப் பகுதியில்தான் இருந்து வந்தோம். நாங்கள் இருவருமே திமுகவினர் என்பதால் பக்கத்துத் தொகுதியில் இடைத் தேர்தல் எப்படித்தான் நடைபெறுகிறது என்பதையும் இயக்கத்துக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று மனச்சாந்தி பெறவும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு, போலியோவால் பாதிக்கப்பட்ட என் நண்பனையும் பின்னால் அமரவைத்து, தொகுதியின் துவக்கப் பகுதியைக் கடந்து சற்று முன் சென்று ப்ளூஸ்டார் என வழங்கும் பகுதியை வந்தடைந்தோம்.

   இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் பி.எல். இராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் சோ.மா. இராமச்சந்திரனும் போட்டியிட்டனர். 
  எங்களுக்கு ஒரே பிரமிப்பு; சாலையெங்கும் அலங்கார வளைவுகளும், கொடிகளும் தோரணங்களும், தொண்டர்களின் இடைவிடாத, வாக்களிக்க  வேண்டிய  வாக்காளர்களைத் திரட்டுதலும் என அட்டகாசப் படுத்திக் கொண்டிருந்தனர் அனைவரும் அதிமுகவினர்; அமைச்சர்களும் அடங்குவர். அருகில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியின் ச.ம.உ. JCD பிரபாகரன்தான் உள்ளூர் முக்கியப் பிரமுகர்.

    எதையோ பறிகொடுத்தபடியான எண்ணத்துடன் நாங்கள் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி அருகே சென்றோம். அங்கே அதன் எதிரே உள்ள கல்யாண மண்டபங்களெல்லாம் அதிமுக மந்திரிகளின் கைவசத்தில்; அங்கிருந்துதான் உணவு மற்றும் கொடிகள், வாக்கு விவரத்தாள்கள் (door slip) என அனைத்தும் உள்ளே வருவதும் போவதுமாக! ஆச்சரியம்தான்! இவ்வளவுக்கும் எந்தவிதமான ஆர்பாட்டங்களும் இல்லாமல் திமுகவின் பணிகள் நடந்தவண்ணம்தான் இருந்தது.

   இந்த அத்துமீறல்களையும் மீறி நாம் எப்படி வெல்லப் போகிறோம்? நண்பன் புலம்பத் தொடங்கிவிட்டான்; அவனை சமாதானப்படுத்த, மிதிவண்டியை அமைந்தகரை நோக்கி செலுத்தினேன்! ஒரு இடத்தில் நிறுத்தி தேநீர் அருந்தினோம்; பிறகு அங்கிருந்து, சில வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்த செயின்ட்.ஜார்ஜ் பள்ளியின் முகப்புக்கு வந்தோம் (பச்சயப்பன் கல்லூரி எதிரில்).  பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரம் இருந்த அந்தப் பள்ளியின் முக்கிய வழியின் இரு பக்கமும் உள்ள நடைபாதையில், சற்றுத் தள்ளி, ஒருபுறம் திமுகவின் அலுவலகமும் மற்றொரு புறம் அதிமுகவின் அலுவலகமும் கீற்றுக் கொட்டகைகளில் அமைந்திருந்தன. நாங்கள் திமுக கொட்டகையை ஒட்டி, அவர்களின் செயலை கவனித்தபடி இருந்தோம்.

     உள்ளூர் தலைவர் ஒருவர் எங்களைப் பார்த்ததும் என்ன ஓட்டு போட்டுவிட்டீர்களா என்று கேட்டார். நாங்கள் திருமங்கலத்திலிருந்து வந்துள்ளோம்; நம் கட்சியின் வெற்றி நிலவரத்தை புரிந்துகொள்ள, என்று சொன்னோம். உடனே அவர் நம்ம ஆளுங்கதானே தம்பிகளா ஆளுக்கு ஒரு வோட்டு போடுங்க; யாரும் கண்டுபிடிக்காத மாதிரியான வாக்கினை தேர்ந்து தருகிறோம் எனச் சொல்ல, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! இதற்கிடையே வாக்குப் பதிவு நடந்தபடியே இருந்தது; புதிய பகுதி என்பதால் நாங்களும் தயங்கிக் கொண்டிருந்தோம் கள்ள வாக்களிக்க!
  
    இந்நிலையில் எங்களின் திமுக அலுவலகம் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது திமுக கொடியுடன். அதிலிருந்து இருவர் இறங்கி, சின்னம் பொறித்த வாக்கு விவரத் தாள்களைக் கட்டுக்கட்டாக எடுத்து, அந்த அலுவலகத்தில் கொடுத்து, கண்டிப்பாக இந்தத் தாளில்தான் (door slip) வாக்களிக்க வருகின்ற வாக்காளர்களுக்கு வாக்கு விவரங்களை எழுதித் தந்து உள்ளே சென்று வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்; அதன் பிறகு நிறைய பேர் வந்து சீட்டினைப் பெற்று வாக்களித்துச் சென்றனர். என் நண்பனிடம் நான் சொன்னேன்; கவலைப்படாதே நாம்தான் இந்தத் தேர்தலில் வெல்வோம் என்று. "எப்படி' என்றான். "அந்த டோர்சிலிப்பில் இருப்பது வாக்காளர்கள் விவரம் மற்றும் சின்னம் என்று தானே நாம் நினைத்தோம்; அது சின்னம் அல்ல; இப்போதைக்கு நம்மவர்கள் கண்டுபிடித்த புது டெக்னிக். அதாவது, உதயசூரியன் சின்னத்திற்குப் பதிலாக, எம்ஜியார் ஒரு குழந்தைக்கு சத்துணவு ஊட்டுவது போன்ற படம் அச்சிடப்பட்டிருக்கிறது; இந்த சீட்டைக் கையில் எடுத்து வருவது நமது அதிமுகவினர்தான் அது கள்ள வாக்காக இருந்தாலும் நாம் விட்டுவிடுவோம் என்று உள்ளே இருக்கும் அதிமுகவினர் கருதுவார்கள்; தேர்தல் முடிய இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது; முடிந்தவரை குத்திவிடுவோம் என நம் ஆட்கள் செயல்படத்  துவங்கிவிட்டனர்; எனவே வெற்றி நமக்குத்தான்" என்றேன். அதேபோல் வந்த ஆட்டோவும் அடுத்தடுத்த திமுக தேர்தல் பணிமனைகளுக்குச் சென்று தன் பணியைச் செவ்வனே தொடர்ந்தது. அதிமுக, மது மற்றும் பிரியாணி மயக்கத்தில் இருந்தது.

  தேர்தல் முடிவு வெளியானது. திமுகழகத்தின் அன்றைய புதிய சென்னை மாவட்டச் செயலாளரான டி.ஆர்.பாலுவின் உழைப்பு வீணாகவில்லை; திமுக வென்றது அண்ணாநகரில்.1977-ல் அனுபவமற்ற அதிமுகவிடம் இதே தொகுதியில் கலைஞரவர்கள் வெற்றியா தோல்வியா எனக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவில் சுமார் 600 வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்முறை சோ.மா. ராமச்சந்திரன் சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனக்கும் என் நண்பனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

   திமுகவின் தொண்டனாக இருந்தபோதிலும் நான் அப்போதே பல கட்சிகளின் செயல்களையும் அதன் முக்கியஸ்தர்களின் பேச்சினையும் விரும்பிக் கேட்பேன்; பத்திரிகைகளையும். அந்த வழியில் துக்ளக் படிப்பது வழக்கம்; அந்த வார துக்ளக்கில் அண்ணாநகர் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஒரு பெட்டிச் செய்தியொன்று வந்திருந்தது; அதில், 'அத்தொகுதியில் திமுக வென்றது, கள்ள வாக்குகளினால்தான்; சென்னை மாவட்ட செயலாளர் பார்வையில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேலாக கள்ளவாக்குகள் பதிவிடப்பட்டிருந்தது' என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கடுத்த துக்ளக் இதழில், ஒரு வக்கீல் நோட்டீஸ் டி.ஆர்.பாலுவின் சார்பில் அனுப்பப்பட்டு, அந்த இதழிலேயே பிரசுரமும் செய்யப்பட்டிருந்தது. அதில், அம்மாதிரியான மோசடிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும், மான நஷ்டவழக்கு போடப்போவதாகவும் அது தெரிவித்தது. பதிலாக, துக்ளக் பத்திரிகையும் அந்த வழக்கைச் சந்திக்கவும், எங்களது செய்தி தவறானதல்ல என்று நிரூபிக்கப் போவதாகவும் சொன்னது. அதன் பிறகு, யாரும் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை! 

இப்பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளத் தயார்.



* (வெறிகொண்டது அந்தக் காலகட்டத்தில்; எந்தக் கட்சியின் மீதும் இப்போது வெறி இல்லை; அதனால் ஏற்பட்ட இழப்புகள் மட்டுமே உண்டு மனதில்).
                                                                                படங்கள் உதவி: Google Image 

முற்றாத இரவொன்றில் நாவல்

 

படித்ததில் ஒன்று

    திரு. மா.காமுத்துரை அவர்களின் முற்றாத இரவொன்றில் நாவலை 5.9.2012 அன்று வாசித்தேன்.இது ஒரு காதல் கதைதான்; அதுவும் ஒன்றிணைந்து வாழ வழிவிடாத பெற்றோர்களை விட்டு ஓடிப்போகும் காதலர்களின் கதைதான்.காதலர்கள் காதலிக்க செய்யும் முயற்சிகளையோ, அவர்களின் சாகசங்களையோ, ரசமான காதல் வர்ணனை களையோ காட்டும் கதை அல்ல.

  கதைநாயகர்கள் மாயனும் வசந்தியும் உயிருக்குஉயிரான காதலர்கள்.தங்கள் வீடுகளில்மணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் ஊரைவிட்டு ஓடி,பதினைந்து நாட்களாக தெரிந்தவர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் ஒளிந்துகொள்கிறார்கள்; அந்த 15-வது மாலையில் பெண் வீட்டார் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நண்பனின் வீட்டில் மாயனும் வசந்தியும் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பெண்ணின் தந்தை தனது ஊரின் நாட்டாமை மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு மாயன் வசந்தி இருக்கும் ஊருக்குச் சென்று அந்த வீட்டாரிடம் நயமாக பேசி இருவரையும் அனுப்பிவைக்கும்படி கேட்க, வசந்தி மாயன் அவனது நண்பனும் உடன்செல்ல மறுக்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கருதி அந்த ஊரைவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பி,அன்று இரவே அந்த இளவட்டங்களை பிரித்துக்கொண்டுவர ஏற்பாடுகளை செய்கிறார்கள்; அதே நாளிரவில் தோழன் சோனைமுத்து வீட்டிலும் காதலர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.இப்படி மாலை முதல் இரவு விடியும் வரை இரு தரப்பிலும் நடக்கும் சம்பவங்களை மிகவும் யதார்த்தமாக சுவையுடனும் இயல்பாகவும் எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.

   என்னதான் ஒரே சாதியாக இருப்பினும் இந்த காதலர்கள் விஷயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்கபேதம் தலையிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சிவப்புத் தோழர் தன் வழியிலும் மாயனின் தந்தை ஒரு வழியிலும் நாட்டாமை ஒரு வழியிலும் அவரை அழுத்த நினைக்கும் மைனரும் அவனது கையாள் ராசப்பனும் மற்றொரு வழியிலும் செயல்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் தாய் தனக்கு ஆதரவாக செயல்பட இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்னும் முடிவுடன் நிலை தடுமாறி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகிறாள்.அந்த முற்றாத இரவின் முடிவுகளை தனது மெல்லிய ஒளியினைப் பாய்ச்சி தானே சாட்சியாகி நிற்கிறது வட்ட நிலா!

    இது விமர்சனம் அல்ல.மற்றவர்களுடன் பகிர்வு மட்டுமே!ஒரு சிறு குமிழிதான்!

நன்றி!

 

பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.


படித்ததில் பிடித்தது...

பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.

எழுதியவர்: முபாரக் அலி. பாகிஸ்தானின் வரலாற்று பேராசிரியர்!

தமிழில்: மொழிபெயர்ப்பு: நா.தருமராஜன்.

வெளியீடு: என்.சி.பி.எச்.

     வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக்கருத்து --- இது பதிப்புரை.

     முனைவர் முபாரக் அலி தொழில்முறை வரலாற்றாசிரியர்களிடமிருந்து தனித்து, மசூதிகள், மற்றும் அரசவைகளில் மையம் கொண்டிருந்த பாகிஸ்தானின் வரலாற்றை சாதாரண மக்களை நோக்கித் திருப்பினார். தெளிவான நடையில் வரலாற்று நூல்களை எழுதினார் -- மாணவர்களும் அரசியல்வாதிகளும் விரும்பும் வண்ணம்! அதிகாரபூர்வ வரலாறுகளில் உள்ள தவறுகளையும் பிரச்சாரத்தையும் வன்மையாக விமர்சனம் செய்திருக்கிறார். அரசு என்ற கவசத்தை அணிந்துகொண்டால் வரலாறு தன்னுடைய படைப்புத் திறனை இழந்துவிடுகிறது என்றும் மக்களுடைய சிந்தனா சக்தியை தூண்டுவதற்குப் பதிலாக அதை உறைய வைக்கிறது என்றும் சொல்கிறார்.
--- இது: முனைவர் ஸையது ஜாபர் அஹமது
கராச்சி பல்கலைக்கழகம், கராச்சி.

    இந்த புத்தகத்தின் வெறும் 140 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக,தெளிவான நடையில் தமது நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் இருக்கின்ற நிலையினை எடுத்துக் கூறுகிறார் முபாரக் அலி. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு வந்த அரசின் தலைவர்களும் அதன்பின் அடுத்தடுத்து வந்த அரசுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் சிறு சரிவுகளுக்குக்கூட மதத்தையும் மதத் தலைவர்களின் தொடர்புகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, அதிகாரத்தைத் தங்கள் கையிலிருந்து செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்நாட்டின் மதம்தான் முக்கியம்; அதனால் மதவழி மீறாமல் அதன்வழியே ஆட்சி நடத்துவது போன்ற பாவனையை ஏற்படுத்தி மதத்தலைவர்களை திருப்தி செய்து, அவர்களை வைத்தே எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தி அரசியல்வாதிகள் தங்கள் நலனைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்; அதே நேரத்தில் மதவாதிகளும் மதத்தையும் மக்களையும் காட்டிக்காட்டி அரசியல்வாதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்திருக்கிறார்கள்.

   மேற்கண்ட நிலை தொடர்ந்தபோது அரசியல்வாதிகளின் தகுதிகள் குறையத் துவங்கி மதவாதிகளின் கை ஓங்கி மதத்தின் பல வலுப்பெற்ற உட்பிரிவுகள் தாங்களே பல மதவாதக் கட்சிகளைத் துவக்கிக்கொண்டன; மக்களின் மத உணர்ச்சிகளைத் தூண்டி ஆட்சியதிகாரம் பெற மதம் விரும்புகிறது; அரசியலும் மதமும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன.

   இஸ்லாமிய மத போதனைகளில் எந்த புதிய விளக்கங்களும் புதிய மாற்றங்களும் ஏற்க்கப்படக்கூடாது என்பதில் பாகிஸ்தானிய மதவாதிகள் மிகத் தெளிவாக உள்ளார்கள்; அதிலும் இந்திய இஸ்லாமிய அறிஞர்களின் எந்த புதிய விளக்கங்களும் தவறிக்கூட தங்கள் நாட்டில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

   மேலும், இந்நூலில் பாகிஸ்தானில் ஒவ்வொரு அரசும் எவ்வாறெல்லாம் மதத்தைப் பயன்படுத்தின என்றும், ஒவ்வொரு சர்வாதிகாரியும் எப்படி மதத்தைப் பயன்படுத்தினர் என்றும், அந்நாட்டிற்கான வரலாற்றை அமெரிக்கர்களை வைத்து எழுதியதையும், இந்தியா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை மாற்றி எழுதுவதையும் தமது பாகிஸ்தானின் வரலாற்றைத் தங்களவர்களே தவறாகத் திரிப்பதையும் எழுதி மனம் புழுங்குகிறார் அதன் ஆசிரியர் முனைவர்.முபாரக் அலி!

   மதத்தைக் கைக்கொண்ட எந்த ஒரு நாடும் இப்படித்தான் இருக்கும் என்றும், நமது நாட்டில்கூட ஒரு சில வேற்று மதவெறியர்களின் செயல்களுக்காக மாற்று மதவெறியின் ஆட்சி தேவையா என்று அச்சம் ஏற்படுவது இயல்புதானே! நன்றி!

   இது கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

 

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்


நார்ட்டன் எனும் புகழ்பெற்ற ஆங்கில வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருந்தார். 'சான் வாலீஸ்' என்ற நீதிபதியும் இன்னொரு இளைய நீதிபதியும் அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். "நார்ட்டன்" புத்தகங்களைப் புரட்டி அவைகளிலிருந்து நீண்ட பகுதிகளைப் படித்துக் காட்டியவாறு இருந்தார். "நார்ட்டன்" தனது குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் இடத்திற்குத் தகுந்தாற்போல் படித்ததால், நீதிபதி 'சான் வாலீசின்' காதில் தாலாட்டு மாதிரி பட்டது போலும். 'சான் வாலீசின்' கண்கள் மூடின. தலை நெஞ்சில் புதைந்தது. அது போலவே நீதிபதி 'சான் வாலீசின்' டபேதாரையும் தூக்கம் ஆட்டவே, அவனும் தூங்க ஆரம்பித்தான். இதைக் கவனித்த "நார்ட்டனுக்கு" சிறிது ஆத்திரம் வந்தது. அவர் தன் முன்னால் இருந்த புத்தகக் கட்டைத் தள்ளினார். அது தரையில் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது. டபேதார் தூக்கத்திலிருந்து தடால் என எழுந்தான். நீதிபதி 'சான் வாலீசும்' திடீரென்று கண்விழித்தார்.
"நார்ட்டன்" 'மாண்புமிகு நீதிபதியே நான் வருந்துகிறேன் எனக் கூறினார்.
"ஏன் என்ன விஷயம் நார்ட்டன்?"
" ஓ, ஒன்றுமில்லை. அய்யா, டபேதார் தானும் ஒரு நீதிபதியைப்போல் நீதிமன்றத்தில் தூங்கமுடியும் என்று கருதுகின்றான்" என்று அமைதியாகப் பதிலளித்தார் "நார்ட்டன்"
---"வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்" அய்யா.பொ.வேல்சாமி  அவர்கள் 

முகநூலில்
  அடையாள காட்டிய மிகச் சிறந்த, சட்டத்துறை வரலாறும், சுவையான நிகழ்ச்சிகளும் நிறைந்த நல்ல நூல்.

 

விந்தை மனிதர்கள்!

ஒருமுறை செங்கல்வராயப் பிள்ளை என்பவர், திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய நூல்களைத் திரட்டி புதிய நூலாக வெளியிட்டு அதை உ.வே.சா அவர்களிடம் தந்தார். அதைப் படித்தறிந்த உ.வெ.சா. திடீரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டார், பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை, என்ன காரியம் செய்தீர்கள்? என்றார்.
உ.வெ.சா., தமிழின் பெருமைகளை ஆராய்ந்த புனிதக் கரங்களாயிற்றே அதனால்தான் அந்தக் கைகளை ஒற்றிக்கொண்டேன் என்றார்.
நெகிழ்ந்துபோன செங்கல்வராயப்பிள்ளை விடைபெற்றுக்கொண்டு நாலடி நடந்தவர், திரும்பவும் உ.வெ.சாவிடம் வந்தார். எதிர்பாராத விதமாக அவரது காலில் விழுந்து பாதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
இம்முறை பதறியவர் உ.வெ.சா. பிள்ளை என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள் என்றார். சங்க இலக்கியங்களை பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தேடியலந்த திருப்பாதங்களாயிற்றே என்று கண்ணீர் மல்கக் கூறினார் பிள்ளை. எத்தனைப் பெருமை மிக்கவர் உ.வெ.சா.

--- 'வரலாற்றில் அரிய நிகழ்வுகள்' எனும் நூலிலிருந்து.

அடித்தள மக்கள் வரலாறு: ஆய்வு நூல்

 


அடித்தள
 மக்கள் வரலாறு:
 

                          ஆ
.சிவசுப்பிரமணியன்
.

வெள்ளையர்
 ஆட்சியில் காரன்வாலிஸ் காலத்தில் 1786-ல் கொண்டுவரப்பட்ட நிலவரி முறைகிழக்கிந்திய கம்பெனிக்கு நல்ல வருவாய் ஈட்டித் தந்ததுஎனினும்விளைச்சலற்ற காலங்களில் வரி செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர்எனவேஇம்முறையைக் கைவிட்டுஇரயத்வாரி எனும் புதிய நிலவரியை அறிமுகப்படுத்தினார் தாமஸ் மன்ரோ.
இந்த இரயத்வாரி முறையில் கர்ணம் அல்லது கணக்குப்பிள்ளை எனும் பதவியில் உள்ளவர்களின் கொள்ளைகளைப் பற்றி தாமஸ் மன்ரோவே நிலவருவாய் கழகத்திற்கு கடிதம் எழுதுகிறார் கீழ்க்கண்டவாறு: (அவர் நெல்லை மாவட்ட ஆட்சியராக 1823 - 1826 வரை இருந்தபோது):
"
கிராம முன்சீப்களும்நாட்டாண்மைக்காரர்களும்மிராசுதாரர்களும்கர்ணங்களும் மிக நல்ல நிலங்களை எல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டார்கள்ஆனால் தரம் குறைந்த நிலங்களுக்கு உரிமையாளராக இருக்கும் உழவர்களிடம் அதிகமான வரி வசூலித்து அவர்களைத் துன்புறுத்துகின்றனர்"(ராமசாமி 1990: 756,757).
"
கர்ணம் சர்க்காருக்கும் குடியானவர்களுக்கும் பொதுவான அதிகாரிபொதுவாக இரு தரப்பையும் ஏமாற்ற முயல்வார்என்கிறார் அன்றைய வேறொரு ஆட்சியர்(நீல்மணி முகர்ஜி 1962: 234).
                          

நூலிலிருந்து சிலதுளிகள்: 2.

அன்றைய திருவாங்கூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டம் இருந்தபோதுபண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக இருந்த தோள்சீலைப் போராட்டத்தினைப் பற்றி ஒரு நொடிக்கதை ஒன்று உலவி வந்ததைப் பார்ப்போம்:
இன்றைய குமரி மாவட்டத்தின் மேற்கே உள்ள விளவங்கோடு பகுதியைச் சுற்றிப் பார்க்க மூலம் திருநாள் மன்னர் வந்தார்மன்னரின் வருகைக்கு முன்னேற்பாடு செய்ய அப்பகுதிக்கு வந்த பேஷ்கார்நன்றாகக் குளித்து சுத்தமாக ஆடை அணிந்து மன்னரை வரவேற்கும்படிக் கூறிச் சென்றார்குறித்த நாளில் மன்னரும் அங்கு வந்தார்ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மன்னரை வரவேற்கக் கூட்டமாக நின்றனர்அப்பெண்கள்கூட்டத்தை மன்னர் கடக்கும்போது இடுப்பு ஆடையைத் தூக்கிப் பெண் உறுப்பைக் காட்டினார்கள்.
மன்னர் அக்காட்சியைப் பார்த்தாலும் ஒன்றும் கூறாது அமைதியாகச் சென்றுவிட்டார்கோபமாக வந்த பேஷ்கார் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டீர்களே என்று சத்தமிடஅம்மக்களும் பதட்டமின்றிஇதுவரை வெள்ளாளர்களுக்கும்நாயர்களுக்கும் திறந்த மார்பைக் காட்டி வந்தோம்அவர்களைவிட மேலான மகாராஜா வரும்போது அவர்களுக்குக் காட்டாத ஒன்றைக் காட்டுவதுதானே மரியாதைஅதனால்தான் மரியாதைக்காக இப்படிச் செய்தோம் என்று கூறினார்கள்பேஷ்கார் பதில் எதுவும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார் (.கா.பெருமாள்: 6-6-99).”
என்னுரைஇதுதான் ராஜமரியாதை என்பதோ….! என்றாலும் இது கதையில்தான்இது நொடிக்கதை என அழைக்கப்படுகிறது.

நல்ல நிலம் நாவல்

 




நல்ல நிலம்


பாவை சந்திரன்

 
1990 – களில் தொடர்ந்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செல்வேன். இக்காலக் கட்டத்தில்தான் நான் அதிக நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். அரசு நூலகங்கள் சென்று,  படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, ஒரு சில மணிநேரங்கள் செலவிட்டு இனி வாசிக்க வேண்டிய நூல்களைத் தேர்வு செய்வேன். அப்படிப் புத்தகங்களைத் தேடும்போது,  நூலகர், இவன் என்ன நூல்கள் அடுக்கப்பட்ட பல வரிசைகளின் இடையே தூங்கிவிட்டானா அல்லது தேடும் சாக்கில் ஏதாவதொரு நல்ல புத்தகத்தைத் திருடி மறைத்துக் கொள்கிறானா எனும் எண்ணம் தோன்றி, முதலில்
“என்ன தம்பி, இன்னுமா எடுக்கிற?”
“ஏன் சார், உங்களுக்கு நேரமாகி விட்டதா?”
“பரவாயில்ல சீக்கிரம் எடு” என்பார்.
அடுத்த முறை போகும்போது,
“மூணு உறுப்பினர் அட்டைய போட்டுகிட்டு, அதுக்கான மூணு புக்கையும் நீ எடுக்குறதுக்குள்ள…
அதுசரி, நீ என்ன படிச்சிருக்கே, இவ்ளோதானா, எடுத்துப் படிக்கிற தலைப்புகளப் பாத்தா அப்படித் தோணலையே…”
“புத்தகம் படிக்கிறது எப்படின்னு எனக்கு ஒரு நண்பர் சொல்லி அதுப்படி நான், நிறைய எழுதினவர் கொஞ்சமா எழுதினவர் – பிரபலமானவர் பிரபலம் ஆகாதவர் என்றெல்லாம் எழுத்தாளர்களைத் தேர்வு செய்றதில்லை; நல்ல நூலாக நான் கேள்விப்பட்டு, அதிலுள்ள முன்னுரை மற்றும் பதிப்புரைகளை படித்து பின்புதான் வாசிக்க முடிவு செய்வேன்” என்று சொன்னேன்.
இது அந்த நூலகத்தின் நான் சென்று சேர்ந்த ஆரம்ப நாட்களில்தான்; நூலகருடம் அதிக நெருக்கம் ஏற்பட ஏற்பட அவரே என் ரசனை அறிந்து சில புத்தகங்களை அறிமுகம் செய்து படிக்கச் சொல்வார். பின்னர் அவருக்கும் நான் சில உதவிகள் செய்தேன் நூலக வாசக நலனுக்காக.
    
            அங்குதான் நான் ர.சு.நல்லபெருமாள், பிரபஞ்சன், பொன்னீலன், ஜெயகாந்தன், ப. சிங்காரம், பூமணி, கி.ரா., தோப்பில், விட்டல் ராவ், நாஞ்சில் நாடன், சா. கந்தசாமி, சோ.தருமன், வைரமுத்து, அப்துல் ரகுமான், மு.மேத்தா, தி.ஜா, ஈழத்தின் கே.டானியல், செ.கணேசலிங்கன், தேவகாந்தன், அருளர், இராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களைக் கண்டடைந்தேன். மொழிபெயர்ப்பு நூல்களில் புஷ்கின், பதயேவ், பரீஸ் பொலெவோய், ராகுல சங்கிருத்தியாயன், தகழி, முகுந்தன், வைக்கம் மு.பஷீர், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், சிவராம கரந்த், வி.ஸ. காண்டேகர், சரத் சந்திரர், பதீன் பந்தோபாத்யாய, பிரபுல்ல ராய் என்று தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்தான் சிற்றிதழாகவும் இல்லாமல், இலக்கியம் தானோ எப்படியோ வழக்கமான மசாலாக்கள் இல்லாத வகையில் ‘புதிய பார்வை’ எனும் மாதமிருமுறை இதழ் ஒன்று புதியதாக வெளிவந்தது.
‘புதிய பார்வை’

            கணவனால் மனைவிக்குப் பெருமையா அல்லது மனைவியால் கணவனுக்குப் பெருமையா என்பது அந்தந்தக் குடும்பத்தின் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தது; இங்கே பெருமையா சிறுமையா என்ற ஆய்வு நமக்கு வேண்டாம்; தமிழக அரசின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசன், அரசியல் சூழல் காரணமாக, சசிகலாவின் கணவர் நடராசன் என்றே வழங்கப்பட்டது மனைவியின் ஆளுமைதான். அப்படி அரசியலில் எதிர்ப்பும் ஆதரவும் நிரம்பப் பெற்றிருந்த திரு. நடராசன் அவர்கள்தான் இந்த புதிய பார்வை இதழின் ஆசிரியர்! அவரது இலக்கிய ஆர்வம் காரணமாகத் துவங்கப்பட்ட இந்த இதழில் பலரும் பங்களித்து இருக்கிறார்கள் சில வேற்றுமைகளை மறந்து அல்லது தள்ளிவைத்து. ஒரு சில ஆண்டுகளே வெளிவந்து நின்று போனது இந்த இதழ். சில வருடங்கள் கழித்து வெளியாகி, கொஞ்சம் கொஞ்சமாக தனது இயல்பை இழந்து நடந்து வந்தது. இப்போது நடராசனின் மரணத்துக்குப்பின் வெளியாகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
           
            இவ்விதழில், அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற கீ.வீரமணி அவர்களின் தொடரும், நானும் இந்த நூற்றாண்டும் எனும் கவிஞர் வாலியின் தொடரும், திகசி, எம்விவி, சி.மோகன், மணா போன்றோரின் தொடர்களும், ராஜம் கிருஷ்ணனின் கோடுகளும் கோலங்களும், தமயந்தியின் லிலிபுட் மனிதர்கள், சுஜாதாவின் சின்னக் குயிலி போன்ற நாவல்களும் அப்போதைய இதழாசிரியராக பாவை சந்திரன் புதிய பார்வையை திறம்பட நடத்தி வந்தார். தனது கைவண்ணமாக திரு. பாவை சந்திரன் அவர்களும் ஒரு நாவலைத் தொடர்ந்து எழுதிவந்த வேளையில் இதழானது நின்று போகவே, அருமையான அந்த நாவலை அத்தோடு நினைக்கவில்லை; என்றாலும் அந்த எழுத்தின் தாக்கம் மனதில் இருக்கவே செய்தது. பின்பு ஒருமுறை முகநூலில் நண்பர் சுந்தரபுத்தன் அவர்கள் (அவரும் இந்த இதழில் பணியாற்றியிருக்கலாம், நினைவிலில்லை.) இந்த நாவல் தொடர்பாக பழைய புதிய பார்வை இதழ்கள் யாரிடமாவது உள்ளதா எனக் கேட்க (முகநூலில்), நான் என்னிடமிருந்த பல இதழ்களைச் சொன்னேன்; அவையனைத்தும் என்னிடம் உள்ளது. இரண்டாவதாக வெளிவந்தபோது வந்த தொடர்கள் வேண்டுமென்றார்; இல்லை என சொன்னேன். அவ்வளவுக்குப் பிரபலமான அந்த நாவல் தற்போது எனக்கு கொரட்டூர் நூலகத்தில் கிடைத்தது.

            1890 – களில் துவங்கும் இந்த நாவல், நாடு 1947 - ல் சுதந்திரம் வாங்கும் வரையில் முதல் பாகமாக வழங்கப்பட்டுள்ளது. காமு என்கிற காமாட்சி. கதையின் நாயகி. கதையின் நாயகனாக இதில் யாரையும் குறிப்பிடுவது சரியாகாது. அவளது கணவனையேகூட அவள் வாழ்வின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எதிரியாகவே காலம் வைத்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சகிப்புத் தன்மையே கதையின் மையப்புள்ளி. சகிப்புத்தன்மையும் துன்பமோ இன்பமோ வருகின்ற எதையும் புறந்தள்ளாமல் முதலில் சிறிது தயங்கி, பின்பு அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பெண்மையைப் போற்றுகிறது. காமு இந்தக் காலத்துப் பெண் அல்ல; வெள்ளையர் நம் நாட்டை ஆண்ட  ஒளியற்ற பாரதத்தில் பிறந்தவர்; படிப்பறிவற்ற, வெளியுலகத்தை அறிமுகப்படுத்தாத சமூகத்தில் பிறந்து, வாழ்க்கையில் தொடர்ந்து வரும் துன்பங்களைத் தாண்டி, குடும்பத்தை ஒன்றிணைக்கிறாள் காமு. வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியில் தன்னைக் கைவிட்டு ஓடிப்போன தன் கணவன் செயலால் சமூகத்தின் கேலிப் பார்வைக்கும் சிலரின் காம இச்சைக்கும்  பதிலளிக்கும் விதமாகத் தன்னை ஒரு புதுமையானவளாகக் காட்டி,  தன் குடும்பத்தையும் தன்னைச் சரணடைந்தவர்களையும் அரவணைக்கும் அன்னையாய் ஜொலிக்கிறாள்.

            ஜாதகம் பொருந்தாத காரணத்தினால் தள்ளிக்கொண்டே சென்றது காமுவின் திருமணம்; பொறுத்தமான ஜாதகம் வந்தது, ஆனால், இரண்டாம் தாரமாக; பிரசவத்தின்போதே தாயை இழந்து, கஷ்டப்படும் குழந்தைக்காக மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகவே திருமணம் செய்துகொள்வதுபோல நடந்து கொள்ளும் சுப்பிணி; நிலம்நீச்சு வசதிகளுக்குப் பஞ்சமில்லை அவனுக்கு. தாய் தந்தையின் கஷ்டங்களைப் போக்கும் விதமாக இந்தத் திருமணத்திற்கு காமு உடன்பட்டு, கல்யணமும் நடந்தேறியது. சுப்பிணியின் குழந்தையைத் தன் குழந்தையாகவே ஏற்றுக்கொள்கிறாள் காமு. இதிலிருந்து தொடர்கிறது காமுவின் செயல்திறனும் சகிப்புத் தன்மையும்.

            காமு தன் தலைப் பிரசவத்திற்குத் தாய்வீடு சென்ற சமயம் சுப்பிணி ஒரு மீனவப் பெண்ணைத் தன் வசப்படுத்திக் கொண்டான். அவள் மகனுக்கும் வெளியில் அறிவிக்காத தகப்பனான். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், அதாவது அவன் ஊரில் நடந்த ஒரு கொலையின்போது தலைமறைவாய் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பதினைந்து – இருபதாண்டுக் காலத்தில்கூட தனக்கென ஒரு குடும்பத்தை உண்டாக்கிக் கொள்ளத் தவறியதில்லை. இவன் தலைமறைவாய் ஆகும் சமயத்தில் காமு இரண்டாவது கருவை வயிற்றில் சுமக்கத் தொடங்கினாள். ஓடிய சுப்பிணி பின்பு பல வருடங்கள் கழித்து வசதி வாழ்க்கையுடன் ஒரு குடும்பத்தோடு நாகப்பட்டினம் வருகிறான். இதன் நடுவே அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாமல் பிறந்தவனாக, தன் அத்தையிடம் வளர்ந்த மூத்த தாரத்து மகன் குழந்தைவேலு ஊரைவிட்டு ஓடிப்போகிறான். பர்மாவிற்குச் சென்று அங்கிருந்து உலகப்போரின் காரணமாக கால்நடையாகவே மீண்டும் இந்தியாவிற்கு, நாகைக்கு வருகிறான்.

            இப்படிப் பல சிக்கல்களைக் கொண்ட தன் வாழ்வை எப்படித் திறம்பட நடத்தினாள் காமு என்பதே இக்கதையில் முக்கியம். இரண்டாவதாக முழுகாமல் உள்ள காமுவை – கணவன் ஓடிவிட்ட நிலையில், தங்கள் ஊருக்கே சென்றுவிட  பெற்றோர்கள் அழைத்த போதும், தங்கள் நிலத்தை பண்ணையாள் மூலமாக தானே முன்வந்து விவசாயம் செய்த போதும், கடல் சீற்றத்தின்போது வயலில் உப்புத் தண்ணீர் நுழைந்து விவசாயம் பொய்த்த போதும், தன் எதிரில் நின்ற மீனவப் பெண்ணின் மகன் சுப்பிணியை உறுதிப்படுத்திய போதும், வேட்கைக்கு இணங்காததால் கணக்கனின் மறைமுக தொல்லைகளை சந்தித்த போதும்,  நட்புக்காக தன் விதவைத் தோழியின் பிழைப்புக்கு வழிகாட்டிய போதும், பலகாலம் கழித்துத் திரும்பிய கணவன் இச்சைக்கு ஏங்கிய சமயம் அவள் எடுத்த நிராகரித்தலின் போதும் காமு எங்குமே தடுமாறியதில்லை; தடம் மாறியதில்லை. இதன் பிறகும் பல  துன்பங்களை சந்தித்த அவளுக்கு சில ஆறுதல் தரும் மனிதர்களும் உண்டு; அவ்வகையில் சுப்பிணியின் தங்கை லட்சுமி (காமுவின் நாத்தனார்), அவனது முதிய நண்பர் மாணிக்கம்பிள்ளையும் அவரது மனைவியும், பஞ்சாங்கக்காரர் குடும்பமும் தான்.

            கதைக் களம் நாகப்பட்டினம் மற்றும் அதன் கரையோர கிராமங்களே. இக்கதையின் போக்கிலேயே இயல்பாகவே ராஜாஜி கலந்துகொண்ட உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், ரயில்வேத் தொழிலாளிகளின் போரட்டமும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பர்மாவிலிருந்து கால்நடையாக வந்த அகதிகள் வரும்வழியில் பட்ட இறப்புகள் வலிகள் பலவற்றை ஆசிரியர் பதிவு செய்திருப்பது அருமை! ஆகச் சிறந்த இந்த நாவலை (836 பக்கங்கள்) வாசித்துணர்ந்தேன். இக்கதையின் நாயகி எந்த இடத்திலும் உயர்ந்தே காணப்படுகிறார். அடுத்த பாகம் வெளியாகி உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. கிடைத்தால் அனுப்புங்கள் படித்துவிட்டுத் தருகிறேன். நான் எழுதிய இவைகள் விமர்சனங்கள் அல்ல; வாசிப்பின் சுவையை என்னளவில் விளம்புவதே! நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

நாசூக்கு!


 நாசூக்கு!

வெளியூர் சென்றதன் காரணமாக பன்னிரண்டு நாட்களுக்கும் மேலாக கிடப்பில் வைத்திருந்த கல்யாண மண்டபக் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். வெளியிலிருந்து என்னை அழைத்தார் அய்யா நிமோஷினி விஜயகுமாரன்; வாருங்கள்; அமருங்கள் என்று சொன்னேன்; அமர்ந்தார். கையில் வைத்திருந்த வேர்க்கடலை பாக்கெட் அப்போதுதான் பிரிக்கப்பட்டிருந்தது போலத் தெரிந்தது. எனக்கும் பாக்கெட்டோடு கொடுத்தார்; நாசூக்காக சிறியளவு எடுத்துக்கொண்டு திருப்பிக் கொடுத்து விட்டேன். இலேசான சூடாக இருக்கிறதே என்றேன். இல்லை இந்த பாக்கெட் வெயிலில் இருந்ததால் இப்படி இருக்கிறது என்றார். இப்படி இரண்டொருமுறை மாறி மாறி பரிமாற்றங்கள் நடந்தன. இதனிடையில் சில விஷயங்களையும் பேசினோம். திடீரென, ஒரு வேலையிருக்கிறது நான் கிளம்புகிறேன்; நீங்களும் உங்கள் கணக்கு வழக்குகளை முடியுங்கள், முடிந்தால் பிறகு வருகிறேன் என்று சொன்னவண்ணம் வெளியேறினார் அய்யா நிமோஷினி. அவர் சென்ற சில நிமிடங்களில் எனது மேஜை மேலிருந்த நெகிழிப்பை சில வேர்க்கடலைகளுடன் கிடந்தது. எனக்கு ஒரு சிறு நெருடல்; வாங்கி வந்தவரைவிட, அடிக்கடி வாங்கி நாமே அந்த பாக்கெட்டின் கடலைகளை அதிகம் தின்றுவிட்டோமோ என்று... அப்படி இருக்காது என நம்புங்களேன்!
ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும் எனக்கு; என்னையும் அழைத்த அம்மாவுடன் அவரது சிநேகிதி சகுந்தலாவின் வீட்டிற்குச் சென்றோம். அந்த அத்தைக்கு என்னை அதிகம் பிடிக்கும். உள்ளே சென்றவுடன் சகுந்தலா அத்தை எங்களுக்கு ஒரு தட்டில் இனிப்பு பண்டங்களை வைத்துக் கொடுத்தார்; பேச்சுவாக்கில் இரண்டொரு துண்டுகளைத் தின்றுவிட்டு என் அம்மா, அந்த அத்தையுடன் பேசத் துவங்கிவிடவே, எனக்கும் தீனி தாராளமாக இருந்தது. சில நிமிடங்களில் தட்டு காலி. ஏனோ தெரியவில்லை, அம்மா என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே மண்டையின் ஒரு மூலையில் எனக்கொரு எண்ணம். எனினும், அத்தை மீண்டும் எனக்காகக் கொண்டுவந்த இனிப்புகளைத் தின்னத் தொடங்கிய போது, அத்தை கவனிக்காவண்ணம் அம்மா எனது விரல்களைப் பற்றி, சற்றே முறுக்கிவிட்டார்; எனக்கொன்றும் புரியவில்லை; விரும்பி ருசிக்கிறேன் இடையில் அம்மாவா அத்தையா என்பதெல்லாம் கவனத்தில் கொள்வதாக இல்லை.
அம்மா மற்றும் அத்தையின் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து வெளியில் வந்த போது அத்தை, "இன்னும் வேணுமாடா எதுனாச்சும் சாப்பிட? அக்கா பசியோட இருக்கான்கா...சாப்பாடு சாப்பிட்டுப் போகட்டுமே" என்றார். "அதெல்லாம் ஒண்ணும் வேணா, வரும்போது நல்லா சாப்பிட்டுதான் வந்தான்" என்றார் அம்மா.
அங்கிருந்து சந்து முனை திரும்பியிருப்போம்; எனது தலை திடீரென 'நங்' என கிறுகிறுத்தது; ஓங்கி ஒரே கொட்டு. "எவ்வளவு கொடுத்தாலும் தின்னுக்கிட்டே இருப்பியா... வெளியில் வந்தா ஒரு நாசூக்குத் தெரியாதா...". வீட்டுக்கு வந்த பின் என் உடம்பு புண்ணானது.
ஏங்க நீங்களே சொல்லுங்க... பிடிச்ச தீனிக்கு முன்னாடி நாகரிகம் நாசூக்கு ஏதாச்சும் வேணுமாங்க... அதையே நாசூக்கா சொல்லிக் கொடுத்தா நாங்களும் நடக்கமாட்டோமா....